சாதியும் அதன் வரலாறும்!!

இந்தியாவில் பணம் கொழிக்கும் தொழில்களில் முக்கியமான தொழில், சாதி அடிப்படையிலான திருமணத் தளங்கள். எந்த தொலைக்காட்சியைப்பார்த்தாலும் இந்த சாதிக்கு இந்த இணையதளம், அந்த சாதிக்கு அந்த இணையதளம் என்று சாதிக் கல்யாணத்தை கூவிக் கூவி விற்கிறார்கள், நம் சமுதாய சீர்திருத்தச்செம்மல்களான மறைமுக கௌரவக் கொலைகாரர்கள்.

“சாதி” இந்தியர்களுக்கு பழக்கப்பட்ட, ஆனால் அதிகம் நேரடியாக பேசப்படாத ஒரு விஷம வார்த்தை. இந்த வார்த்தை நேரடியாக பேசப்படாவிட்டாலும், மறைமுகமாக நம்மை ஆண்டுகொண்டிருக்கிறது. சாதி வேண்டாம் என சூளுரைக்கும் அரசியல் கட்சிகள், தேர்தலின் போது அந்தந்தத்தொகுதியில் மிகுந்த செல்வாக்கு உடைய சாதியைச்சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக நிறுத்துகின்றன. சாதி வேண்டாம் என போராடிய தலைவர்களையே தன் சாதி எனக்கூறி பெருமைப்பட்டுக் கொள்கின்றனர் இந்த நாகரீக கோமாளிகள்.

சாதி இப்படித்தான் தோன்றியது என்பதற்கு பல வரலாறுகளும் கதைகளும் இருந்தாலும் சரியாக இதுதான் காரணம், இந்த கால கட்டத்தில் தான் சாதி தோன்றியது என்று நம்மால் கூற இயலாது. சாதியின் தோற்றத்திற்கான அடிப்படை காரணிகளில் ஒன்று,வேதங்கள். ரிக் வேதம் மனிதன் கடவுளின் உடலில் நான்கு பகுதிகளிலிருந்து தோன்றியதாகவும், தலைப்பகுதியிலிருந்து பிராமணர்களும், கைகளிலிருந்து சத்ரியர்களும், தொடையிலிருத்து வைஷ்யர்களும், இறுதியாக பாதத்திலிருந்து ஷுருதர்களும் தோன்றியதாக கூறுகிறது. சில சமூக ஆர்வலர்கள் வேதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தை கூறுவதாக சொல்கிறார்கள்; அதையும் நாம் புரந்தள்ள முடியாது. ரிக் வேதத்தை போன்று யசூர் வேதத்தின் “சத்பத பிராமணா” வேறுபட்ட ஒரு முறையை குறிப்பிடுகிறது.

இந்த வேதங்களைத்தவிர, மற்ற பல காரணிகளும் சாதியை ஊக்குவிப்பதாக உள்ளன. பழங்கால மக்கள் தான் செய்யும் தொழிலுக்கு ஏற்ப தங்களுக்கென ஒரு பெயரையும் சமூகத்தையும் உருவாக்கினார்கள். ஒரு பரம்பரை என்பது ஏழு தலைமுறைகள். ஒரு தலைமுறை என்பது எழுபது ஆண்டுகள். பரம்பரை பரம்பரையாக என்னும் அடுக்குத்தொடர் கிட்டதட்ட இரண்டாயிரம் ஆண்டுகளை குறிக்கும். முன்னோர்கள், பரம்பரை பரம்பரையாக தன் சாதி செய்யும் தொழிலையே தொடர்ந்தனர். இந்தத்தொழிலை அவன்தான் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு சாதியினரும் தன் சாதி தொழிலை நடத்தி அதற்கு ஈடாக வெவ்வேறு வகைகளில் சன்மானம் பெற்றுக்கொண்டனர். உதாரணமாக, அரச குடும்பத்து சாதியினர் மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நிலைத்த ஆட்சியை தந்தனர். அதற்கு ஈடாக அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு வந்தது. இதேபோல் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு முறையில் ஈடுசெய்யப்பட்டது. இதில் சிக்கல் என்னவென்றால், இந்த சாதி இந்த தொழில்தான் செய்ய வேண்டும் என்று யார் முடிவெடுத்தது என்பது தான். மண்ணில் வெய்யோனுடன் மல்லுக்கட்டுபவன் தாழ்வானவனாகவும், மணிமுடியணிந்தவன் உயர்வானவனாகவும் பார்க்கப்பட்டு, அவை சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது எப்போது என்பதுதான் புலப்படாத உண்மை.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.”

என்கிறது வள்ளுவம்.

அதாவது, எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத்தன்மையதே ,ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை. “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்றே பழக்கப்பட்ட நம் மண்ணில் கீழ் சாதி பெண்கள் மேலாடை அணிய தடை விதிக்கப்பட்டதென்பது தலைகுனியச்செய்யும் உண்மை. ஒடுக்கப்பட்ட மக்கள் பெரிய அளவில் இந்து மதத்திலிருந்து மற்ற மதங்களுக்கு மாறியமைக்கு பெருங்காரணமும் சாதி வெறி தான்.

மன்னர்கள் பலர், தாழ்த்தப்பட்ட சாதி மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலங்களைப்பிடுங்கி கோவில்கள் கட்டிய காலமெல்லாம் இருந்தது. சாதியை உயர்த்திப்பிடித்தது மன்னர்கள் மட்டும் அல்ல அன்னியர்களும்தான். ஆம்! மக்களை சாதி அடிப்படையில் வைத்து மக்கள்தொகை கணக்கெடுப்பை பிரிட்டிஷ் அரசு எடுத்துத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அப்படி பார்த்தால் ஆங்கிலேயனோடு சாதிப்பபிரிவினையும் ஒழிந்திருக்க வேண்டுமல்லவா?

அங்கே தான் நம் அரசியல்வாதிகள் நுழைகிறார்கள். ஆங்கிலேயரின் முடிவை முதலாக்கி அதில் இன்றுவரை குளிர்காய்கின்றனர், அரசியல்வாதிகள். மக்களைத்தவறான வழியில் வழிநடத்துகிறார்கள் நம் தானைத்தலைவர்கள். ஆகையால்தான் இன்றுவரை சாதியற்றோறுக்கான ஒதுக்கீடு இல்லை.

குலத்தொழில் பழக்கமும் சாதி செழித்தமைக்கு ஒரு முக்கிய காரணம். ஒரு கட்டத்தில், சாதி ஒரு தகுதி என்ற தவறான எண்ணம் மக்களை ஆட்கொண்டது. தன் தந்தை, பாட்டன், முப்பாட்டன் என அனைவரும் ஒரு தொழில் செய்தால் தானும் அதேதான் செய்யவேண்டுமா? என்ற முற்போக்கு சிந்தனை உருவானது. ஏர்பிடிப்பவனின் கைகள் செங்கோல் பிடிக்க எண்ணினால் செங்கோல் பிடிப்பவன் சும்மா இருப்பானா? அப்போதுதான் ஆரம்பமானது சாதிவெறி. சாதி ஒரு தகுதி என்ற அவல நிலை மாறி சாதி ஒரு உரிமை என்ற பேரவல நிலை உருவானது. அங்கே தொடங்கி, கீழ் சாதிக்காரன் உயர்திணைப்பெயர் முதல் கடவுள் பெயர் வரை வைக்கத் தடை விதிக்கப்பட்டதில் தொடர்ந்தது சாதி கொடுமையின் உச்சம்.

குலம் பார்க்கும் தொழில் நடைமுறையானது, இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலான மக்கள் சமூக வலைத்தளங்களில் தன் சாதியை குறிப்பிடுவது வருந்ததக்கது. இதற்கெல்லாம் முடிவு இல்லையா என ஏங்கித்தவிக்கும் பல முற்போக்கு சிந்தனையாளர்களின் நிலைதான் கவலைக்கிடம். சாதி வேண்டாம் என்ற நிலைமாறி சாதிகளுக்குத் தர்மம் அளிக்கச்சொல்லும் திரௌபதி போன்ற திரைப்படங்கள் முன் நிற்கும் காலத்தில் நாம் வாழகிறோம் என்பது வருந்தத்தக்கது. சாதி இரண்டொழிய வேறில்லை, ஒன்று சாதி வேண்டும் என்பவன், மற்றொன்று சாதி வேண்டாம் என்பவன். இதன் முடிவோ, இன்றும் விடையறியா வினா!

DISCLAIMER: The opinions or views expressed are views of the individual writers and not of the institution. All forms of content published in this website and Student Journalist Council - GCT's social media handles are strictly properties of Student Journalist Council - GCT and are works of the various teams of the respective academic years.

No article, story or any form of content produced by Student Journalist Council - GCT is meant to be reproduced or distributed, either in parts or whole, without prior permission from Student Journalist Council - GCT for any purposes.

About the Author

Pavithra L

Pavithra L

Pavithra is a civil engineering student. The podium and the pen are her truest companions. Politics, anthropology and economics are her cups of tea.


Posts You May Like