மார்க்சிய மெய்யியல்: பகுதி 1

மார்க்ஸின் பெயர் அறிந்த நமக்கு, மார்க்சியம் பற்றி அறிய வாய்ப்புகள் குறைவே! துவண்டு கிடந்த உழைப்பாளி வர்க்கத்தின் கனவுகளை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபித்தவர் மார்க்ஸ். மார்க்சியத்தின் முக்கியக் கூறு உழைப்பிற்கும் உழைப்பாளர்களுக்கும் உற்பத்திப்பொருட்களுக்கும் உள்ள உறவுகளை விளக்கும் தத்துவம் ஆகும். கார்ல் மார்க்ஸும் அவரின் உயிர்த் தோழர் பிரெடலிக் எங்கெல்சும்தான் மார்க்சியத்தைத் தோற்றுவித்தவர்கள்.

எந்த ஒரு கோட்பாடும் அதன் வரலாற்றுத் தேவையின்றி தோன்றுவதில்லை ! கோட்பாடு திட்டங்கள் இல்லாத புரட்சிகள் நீண்ட காலம் நிலைப்பதில்லை . மார்க்ஸ் பல துறைகளில் ஆய்வு மேற்கொண்டதன் விளைவாகப் பல‌ கருத்துக்களின் அமைப்பாக உருவெடுத்ததே மார்க்சியத்தின் முரணற்ற மைய இழை. இதனைப் புதிய உலகில் காண முடிகிறது. வெறும் கதைகளும் , கனவுகளுமாக இருந்த சோசியலிச தத்துவத்திற்கு, உயிர்தரும் அறிவியல் அணுகுமுறைகள் கொண்டது மார்க்சியம். பல காலகட்டங்களில் தோன்றிய தத்துவத்தின் பரிணாமமே இப்போது மார்க்சியத் தத்துவமாக உருவெடுத்திருக்கின்றது .

உலக வரலாறு, மனிதகுல பரிணாமங்கள்‌ மேலும், அனைத்து வகையான சிக்கல்களுக்கும் வர்க்கச் சண்டையே மூலமாய்த் திகழ்கிறது. நாம் வர்க்கப் பார்வையற்று உலகைக் காண்பது முரண்களின் ஓட்டத்தில் நம்மை அறியாமலேயே சிக்கவைக்கும். உலகில், வகுப்பு ஒடுக்குமுறை, தேசிய ஒடுக்குமுறை , சாதி ஒடுக்குமுறை, சமய ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை , நிற வேற்றுமை போன்ற எந்த சமூக ஒடுக்குமுறை ஆனாலும் சரி , அவை இருக்கும்வரை மார்க்சியத்துக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும். மார்க்சியத்திற்கு மூன்று முக்கியக் கூறுகள் உண்டு.

  1. பொருள்முதல்வாத இயக்கவியல்(மார்க்சிய மெய்யியல் — dialectical materialism).
  2. மார்க்சியப் பொருளியல் — இதற்கு அடிப்படையாகத் திகழ்வது மிகைமதிப்புக் கோட்பாடு.
  3. விஞ்ஞான சோசியலிசம் (scientific socialism) -- இது மார்க்சியத்தின் அரசியலைக் குறிப்பதாகும்.
    இதில், மார்க்சிய மெய்யியலுக்கு ஜெர்மானிய மெய்யியலும், மார்க்சியப் பொருளியலுக்குப் பிரித்தானிய அரசியப்பொருளியலும் , அறிவியல் சோசியலிசத்துக்கு பிரெஞ்சுப் புரட்சியும் தோற்றுவாய்களாகும். தொடர்ந்து இப்பகுதியில் மெய்யியலை விரிவாகக் காண்போம்.

மார்க்சிய மெய்யியல்:
மெய்யியல் என்றால் இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றின் அறிவியல் பூர்வத்தின் உண்மையான அறிவியல் ஆகும். அதாவது, அறிவியலின் அறிவியல் ஆகும். உலகம் எப்படி உருவானது , தானாக உருவெடுத்ததா? அல்லது படைக்கப்பட்டதா? அனைத்து படைப்பிற்கும் பொதுத்தன்மை உண்டா? அல்லது அனைத்து நிகழ்விற்கும் ஒருவரே சொந்தக்காரரா? இப்படியான அனைத்து கேள்விகளுக்கும் வேராய்த் திகழும் ஒரே வினாவிற்கு விடையறிந்தால் பெரும்பாலான அனைத்து கேள்விகளுக்கும் விடையறிய இயலும். அவ்வினா, பொருள் முதலா? மெய் முதலா? என்பதே.

பொருள் என்றால் என்ன? மெய்யியலின் தன்மையில், நம்மைச் சுற்றியுள்ளவற்றை நம் கண், காது, மூக்கு, வாய், தோல் ஆகிய ஐம்புலன்கள் கொண்டு பார்த்தல், கேட்டல், நுகர்தல், ருசித்தல், தொடுதல் , போன்ற உணர்வுகளை நம் மூளையின் மூலம் உணர்கிறோம். அப்பொருள்களின் பிரதிபலிப்பாகவே நம் எண்ணம் உதிக்கின்றதே தவிர, நாம் நினைப்பதால் பொருட்கள் உருவாகிவிடாது . சுருக்கமாகச் சொன்னால் பொருட்கள் நம் மனதிற்கு வெளியே உள்ளவை, அவை நம் மனம் சார்ந்து இயங்குவதில்லை ! மாறாக நாம் பொருட்கள் சார்ந்துள்ளோம், நம் கருத்துக்கள் நம்மைச் சுற்றியுள்ள பொருட்களுக்கு ஏற்ப அமைந்திருக்கும்.

நம் உணர்வுகள், எண்ணங்கள் மூலம் நாம் உணரும், எதிர்வினை ஆற்றல், கருத்து, ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா, கடவுள், ஆவி ஆகிய அனைத்தும், கருத்து இனத்தைச் சேர்ந்தவையாகும். புலன்களால் உணரப் படுவதில்லை என்பதாலும், புறவயமானவை அல்ல என்பதாலும் இவை பொருள் ஆக முடியாது. சரி இப்போது கருத்து முதலா அல்லது பொருள் முதலா? என்பதைக் காண்போம். இரண்டு கோணங்களில் இக்கேள்வியை அணுகலாம்.

1. பொருளைப் படைக்கவோ, அழிக்கவோ முடியாது என்பதே அறிவியல் நெறி.
உதாரணமாக ஒரு மரத்தைத் துண்டாக்கினாலும், பின் அதனை எரித்துப் பொடியாக்கினாலும் அது அழிவதில்லை. அதனுடைய வடிவத்திலும், தன்மையிலும் மட்டுமே மாற்றங்கள் உண்டாகின்றன. எனவே பொருளை அழிக்க முடியாது.

அதேபோல் எந்த ஒரு பொருளையும் உருவாக்க மூலப்பொருள் அவசியம். இது, பஞ்சில் இருந்து நூல் தயாரித்து ஆடையாக மாற்றுவது போல் ஆகும். ஆகையால் பொருளைப் படைக்க முடியாது. மாறாக அதற்கு மூலப் பொருள் அவசியம். இதைத்தான் கடவுள் பற்றாளர்கள், பொருள் கடவுளுக்கு உரிய சமாச்சாரம் என்பார்கள்.

பொருளுக்குத் தொடக்கமும் முடிவும் இல்லை என்றால் அகவையும் இல்லை என்று தானே அர்த்தம் ? ஆனால் கருத்துக்கு அகவையுண்டு . புவி தோன்றிய பின் தோன்றியவர்கள்தான் மாந்தர்கள். கருத்துக்குச் சொந்தக்காரர்களாகிய மாந்தர்களான நாமே இடையில் வந்தவர்கள் தான். அப்போது கருத்தும் இடையில் தோன்றியது தானே? ஆகையால் பொருளுக்கு அகவை இல்லை, கருத்துக்கு அகவை உண்டு. ஆகையால் பொருளே முதன்மையானது.

2. புற உலகின் எதிர்ப்பு தான் கருத்தே தவிர, அதன் பிரதிபலிப்பு அல்ல!
புற உலகின் தோற்றம் அதனின் மெய்த்தன்மையை நமக்கு கண்ணாடி போல பிரதிபலிப்பது இல்லை. உதாரணமாக உலகின் மெய்த்தன்மை ஒன்று இருந்தாலும் மனித மனங்கள் அதை அப்படியே ஏற்காமல் பல தவறான கோணங்களிலும் காண்பதுண்டு. பூமி உருண்டை என்றாலும் மனிதர்கள் முதலில் அதனை தட்டை என்றே நம்பிகொண்டிருந்தார்கள். இருப்பினும் உண்மைத்தன்மை அறிந்திட பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு மனிதன் , புற உலகின் உண்மைத் தன்மையை அறிகிறான் ,தன்மையை மாற்றும் ஆற்றலையும் கொண்டுள்ளான். இக்கோணத்தில் அணுகினாலும், பொருளே முதன்மை கொண்டது, அதில் இருந்து தான் கருத்துக்கள் தோன்றுகிறது.

ஆகவே பொருள் தான் முதன்மையானது என்று தெரிகிறது. ஆனால், அதற்காக கருத்துக்கு வலிமை இல்லை என்று பொருளில்லை. இங்குக் கடவுளுக்கு வேலை இல்லை! கடவுள் கருத்தாய் இருப்பின் அதற்கு அகவையுண்டு! கடவுள் பொருளாய் இருப்பின் அதற்கு அந்தம் ஆதி இல்லை! அப்போது கடவுள் உருவாக மூலதனம் ஏது? என்ற கேள்விக்கு மதங்களோ , சாமியார்களோ விளக்கம் அளிப்பதில்லை. இங்கு நாம் நோக்க வேண்டியது எந்த ஒரு நிகழ்வுக்கும் கடவுளின் செயல் என்று சொல்லி கடந்து செல்கிறோம். அப்படி, கடவுள் உள்ளதென்றால், உலகில் ஏன் துன்பங்கள் நிகழ்கிறது? கடவுள் இல்லை என்றால், மனித குலத்தின் பரிணாமத்தை இயக்குவது என்ன? இதுபோன்ற கேள்விகளுக்கு இத்தொடரின் அடுத்த பகுதியில் விடைகளைக் காணலாம்.

DISCLAIMER: The opinions or views expressed are views of the individual writers and not of the institution. All forms of content published in this website and Student Journalist Council - GCT's social media handles are strictly properties of Student Journalist Council - GCT and are works of the various teams of the respective academic years.

No article, story or any form of content produced by Student Journalist Council - GCT is meant to be reproduced or distributed, either in parts or whole, without prior permission from Student Journalist Council - GCT for any purposes.

About the Author

Eavera K L

Eavera K.L

Eavera is a commie guy, does agitation in his writings with the motto of empowering the people and mostly addresses the issues of class conflict.


Posts You May Like