குடியுரிமை சீர்திருத்த சட்டம் 2019

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கூட, ‘சிறுபான்மையின மதங்களாக அங்கீகரிக்கப்பட்ட வேற்றுநாட்டவருக்கு குடியுரிமை வழங்கப்படும்’ என்கிற தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி, அடுத்த தேர்தலில் தன் பெரும்பான்மையை நிலைப்படுத்திக் கொள்ள போராடுகிறது நம் அரசு! நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை புறக்கணித்து, இந்த சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் தான் என்ன?

இந்தியக் குடியுரிமை சட்டமானது(1955) பாக்கிஸ்தான், வங்காளம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து நம் நாட்டில் குடியேறிய இசுலாமியர் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் போன்ற சமயப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்தது. இதில் திருத்தம் செய்யும் முன்வடிவாக இந்தியக் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை 2019ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் ஒன்பதாம் நாள் நம் நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் நாடாளுமன்ற மக்களவை முன்னிலையில் அறிமுகப்படுத்தினார்.

இம்மசோதாவின் முக்கிய அம்சமாக கூறுப்படுவது யாதெனில், நம் நாட்டில் 5 ஆண்டுகள் வரை ஒருவர் வசித்திருந்தாலே, அவர் குடியுரிமை பெற தகுதியுள்ளவராகக் கருதப்படுவார்! ஆக, எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் கூட 5 ஆண்டுகள் வரை நம் நாட்டில் வசித்திருந்தாலே, “இந்தியன்” என்ற உரிமையை எவருக்கும் வழங்கிவிட முன்வருகிறது இந்த அரசு. “என் நாடு! என் உரிமை!” என பேசியதெல்லாம் கழிந்து போக, என் நாட்டையும் என் உரிமையையும் எவருக்கோ பங்கிட்டுக் கொடுக்கும் இந்த சட்டத்திருத்தத்தை, இந்தியக் குடிமகன்/ குடிமகள் என எல்லாத் தகுதிகளோடும் அங்கீகரிக்கப்பட்ட நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? அதே போல் அயல்நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு குடியேறிய அகதிகளுக்கு குடியுரிமை வழங்கி அவர்களை அங்கீகரிப்பதற்கு தான் இச்சட்டம் இயற்றப்பட்டது எனில் நம் நாட்டில் சிறுபான்மையின மதமாகக் கருதப்படும் இசுலாமியர்கள் ஏன் இச்சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை?

முன்னதாக அயல்நாட்டவர் ஒருவர் நம் நாட்டில் குடியுரிமை ‌பெற வேண்டுமெனில், குறைந்த பட்சம் 11 ஆண்டுகள் வரை அவர் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்கிற ஒரு கட்டாயம் நிலவியது. இப்பொழுது இந்த மசோதா அந்த 11 ஆண்டுகளையும் 5 ஆண்டுகளாக குறைக்கச் செய்துவிட்டது. இவ்வாறேயாயினும், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்கள் இச்சட்டத்தின் கீழ் ஏன் கொண்டுவரப்படவில்லை?

மதச்சார்பின்மையுடையது எனப் பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் மதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இதுபோன்ற ஒரு சட்டத்தை கொண்டு வருவது சரியானதாக அமையுமா? அகதிகளுக்கு குடியுரிமை வழங்குகிறோம் என்ற இச்சட்டம் தவறானது ஒன்றுமில்லை, ஆனால் அதில் மதச்சாயம் பூசி இசுலாமியர்களை ஒதுக்குவதே கேள்விகளையும் கிளர்ச்சிகளையும் எழுப்புகிறது!

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளம் ஆகிய நாடுகளில் இருந்து குடியேறிய மேற்கூறிய மதத்தினரை மட்டும் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வர காரணமாகக் கூறப்படுவது, அவர்கள் அவர்களது சொந்த நாட்டில் உரிமைகள் மறுக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, பின் அகதிகளாக பிற நாடுகளுக்கு துரத்தப்பட்டார்கள் என்பதே! இதுவே அவர்களை குடிமக்களாக ஏற்றுக்கொள்ள காரணமாக இருக்குமெனில், இலங்கைத் தமிழர்கள் எந்த விதத்தில் இதற்கு விதிவிலக்கானார்கள்? அவர்கள் ஏன் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவில்லை? எந்த ஒரு ஆவணமும் இல்லாமலே கூட குடியுரிமை பெற 5 ஆண்டுகள் வரை வசித்திருந்தாலே போதும் என இச்சட்டம் கூறும் நிலையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேயே வசித்து வருகிறவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்க கூடாது? இந்த அரசு ஏன் அதைப் பற்றி பேச மறுக்கிறது? இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் அனைத்தும் மதம் மற்றும் மொழியின் போர்வையின் கீழ் நடந்தவையே!

உயிருக்கும் மானத்திற்கும் பயந்து பல நாடுகளில் தஞ்சம் அடைந்தவர்கள் தானே நம் ஈழத் தமிழர்கள்? அவர்கள் ஏன் இச்சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படவில்லை? அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கே இச்சட்டமெனில், இசுலாமியர்களை ஏன் ஏற்கவில்லை? மேற்கூறிய நாடுகளில் அவர்கள் பெரும்பான்மையினர் எனக் காரணம் காட்டிக்கொண்டாலும், அங்கும் ஒதுக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வரும் பாக்கிஸ்தானிய அஃக்மதில்லாக்களுக்கும், ஆப்கானிஸ்தான் ரோகின்ஜாக்களுக்கும் இச்சட்டம் ஏன் பொருந்தாது? இவ்வாறு மதம் சார்ந்த ஒரு பிரிவினையை நம் நாடு சந்தித்துவிடக் கூடாது என்பதற்காகவல்லவா அன்றே ‘மதச்சார்பின்மை’ எனும் கொள்கையை, அடிப்படையான நெறிகளில் ஒன்றாகக் கொண்டு நம் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது!

இச்சட்டம் ஒருபுறம் இருக்க, அதற்கு முன்னதாக ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ என்பதனை அசாம் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தியது நம் அரசு. தங்களின் குடியுரிமையை போதிய ஆவணங்கள் கொண்டு நிரூபிக்க இயலாதவர்களைக் கண்டறிவதற்காகவே இந்தப் பதிவேடு என்கிறது நம் அரசு. அவ்வாறு குடியுரிமையை நிரூபிக்க இயலாதவர்கள் நாட்டிற்கு ஆபத்து விளைவிக்கக்கூடும் எனும் அடிப்படையிலேயே அவர்கள் கண்டறியப்படுகின்றனர். பின் மீண்டும் இசுலாமியர்களை மட்டும் ஒதுக்கிவிட்டு பிறருக்கு குடியுரிமை வழங்கப்படும் எனில், தீவிரவாதத்திற்கும் சமூகவிரோத செயல்களுக்கும் இசுலாமியர்களை மட்டும் காரணமாக காட்ட முயல்கிறதோ இந்த அரசு?

அந்த பதிவேட்டில் ஆயிரக்கணக்கானோரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. இதன் விளைவாக தற்போது அசாம் மாநிலத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போது, இந்த குடியுரிமை மசோதாவின் மூலம் அசாம் மாநிலத்தில் போதிய ஆவணங்கள் இல்லை என்று நிராகரிக்கப்பட்ட இசுலாமியர்கள் அல்லாதவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும். ஆக, இச்சட்டத்தின் மூலம் இறுதியில் நிற்கதியாக நிற்கப்போவது இசுலாமியர்களே என்பது அப்பட்டமாகிறது!

இது அசாம் மாநிலத்தில் மட்டும் இல்லை, இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ள நிலையில், இதனால் பெரிதும் பாதிக்கப்படப்போகிறவர்கள் இசுலாமியர்களே! அவர்கள் நாடுகடத்தப்பட்டாலோ அல்லது தண்டிக்கப்பட்டாலோ நாட்டின் பெரும் பகுதிகளில் நிச்சயமாகக் கிளர்ச்சிகள் வெடிக்கும். பின் இது ஏன் இந்து — இசுலாமியப் பிரிவினையை உண்டாக்காது? நாட்டையே பிளவுபடுத்தும் செயலாக இது ஏன் அமையாது? நாட்டில் மத இன வேறுபாடுகளையே இன்னும் நம்மால் அழிக்க முடியவில்லை. இதில் வேற்றாருக்கு நம் நாட்டில் குடியுரிமை வழங்குவது என்பது, தற்போது அவசியம் தானா?

நாட்டின் பொருளாதாரச் சிக்கல்களுக்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும், தீர்வு காண நம் அரசு இன்னும் போராடிக்கொண்டு தான் இருக்கிறது. இவை அனைத்தையும் கண்டுகொள்ளாது, தேசியவாதம் பேசி இந்த அரசு இப்பொழுது எதை தான் சாதிக்க முயல்கிறது? “நிர்பயா” வழக்கில் தீர்ப்பு வழங்க இத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலையில், எங்கிருந்தோ திடீரென அவசியம் ஏற்பட்ட இச்சட்டத்தை மட்டும் ஒரே வாரத்தில் நம் அரசால் எப்படி அமல்படுத்த முடிகிறது?

DISCLAIMER: The opinions or views expressed are views of the individual writers and not of the institution. All forms of content published in this website and Student Journalist Council - GCT's social media handles are strictly properties of Student Journalist Council - GCT and are works of the various teams of the respective academic years.

No article, story or any form of content produced by Student Journalist Council - GCT is meant to be reproduced or distributed, either in parts or whole, without prior permission from Student Journalist Council - GCT for any purposes.

About the Author

Neithhala Sabariraj

Neithhala Sabariraj

When her unexpected writings led her into the world of poetry , Neithhala found herself putting out the pieces together to pursue her passion in writing.


Posts You May Like