கை முறிந்த கதை

இந்திய தேசிய காங்கிரஸ், சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து, சந்தித்த எல்லாத் தேர்தல்களிலும் இந்திய இரும்புக்கோட்டையின் தகற்க முடியாத் தூணாகத் திகழ்ந்தது. காந்தி முதல் காமராசர் வரை பல தலைவர்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு கட்சி,காங்கிரஸ். இந்திய விடுதலை, எமர்ஜென்சி, பொருளாதாரச் சீர்திருத்தம் என இந்திய வரலாற்றின் அனைத்து பெரு நிகழ்வுகளிலும் முன் நின்று வழி நடத்திய ஒரு கட்சி. தேசியக்கட்சி என்று கூறிய உடனே, நினைவுக்குத் தட்டுப்படுவது கை பதித்த மூவர்ணக்கொடி. என்.ஆர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என பல ஆறுகள் தோன்றுவதற்குக் காரணமான ஊற்று. இப்படிப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம் காங்கிரஸின் சாதனைகளை.

ஆனால் இன்றோ கையறு நிலையாய் இருப்பதுதான் கவலைக்குரிய ஒன்று. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து இல்லாமல், ஆட்சி அமைத்த மாநிலங்களில் பா.ஜ.க. வின் ராஜதந்திரத்தால் ஆட்சியை இழந்து அப்பாவியாய் நிற்கிறது இந்திய தேசிய காங்கிரஸ்.

ஆனால் பா.ஜ.கவை மட்டும் குறை கூறுவது தவறு. காங்கிரஸ் அன்று செய்ததை, அவர்கள் இன்று செய்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் கருத்துக்கணிப்புகள் கூட கண்ணை மூடிக்கொண்டு காங்கிரஸ்தான் வெற்றி பெரும் என்று அடித்துச்சொல்லும் அமேதியே இன்று கோட்டையை விட்டு அமைதியாய் நிற்கிறது. ஒரு நிரந்தர தலைவர் கூட இல்லாமல் இடைக்காலத் தலைவரை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டும் காங்கிரஸுக்கு ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்… ‘ என்பது தான் உண்மையான நிலை. இப்படி ஆனதற்குக் காரணம் என்ன ? கை முறிந்த கதை தான் என்ன?

அதற்கு காங்கிரஸின் வரலாற்றை திரும்பிப்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. பிரதமர் நேரு இறந்த பிறகு, அடுத்த இடைக்காலப் பிரதமர் பகதூர் சாஸ்திரியும் உயிர்த்துறக்க, நேருவின் மகள் இந்திரா ப்ரியதர்ஷினிக்கு பிரதமர் பதவி வந்து சேர்ந்தது. இந்திராவின் இறப்பைத் தொடர்ந்து ராஜிவ், அவரைத் தொடர்ந்து ராகுல் என காந்தி குடும்பத்தினரின் சொத்தாய் மாறிப்போனது காங்கிரஸ். அதற்குக் காரணம் ராஜிவ் இறந்ததற்குப் பின் தலைமையேற்ற அனைவரும் கட்சியை ஒருங்கிணைக்கத் தவறியது. கட்சியை மீட்கக் களம் புகுந்த சோனியாவை இருகரம் நீட்டி வரவேற்றது காங்கிரஸ். அவரைத் தொடர்ந்து அவருக்கு உதவ மகனும் களம் காண, காங்கிரஸ் காந்தி குடும்பத்தின் வம்சாவழி சொத்தாய் மாறிப்போனது. ராஜிவைத் தலைவராக ஏற்றுக்கொண்ட மக்கள் ராகுலை ஏற்கத் தயக்கம் காட்டினர். ராகுல் காந்தி காங்கிரஸ் மட்டுமல்ல இந்தியாவின் எதிர்காலம் என காங்கிரஸ் தொண்டர்கள் நினைத்துக்கொண்டிருக்க, இந்திய மக்களோ வேறு விதமாக எண்ணினர்.

இரு முறை பிரதமராக வாய்ப்பு கிட்டியும் அதனை ஏற்க மறுத்து, தலைமைப் பதவி மீது தனக்கு விருப்பமில்லை என வெளிப்படையாக அறிவித்தார் ராகுல். அதனால் அவர் மீதான மதிப்பு கூடினாலும் தன் கட்சி தலைமையிலான ஆட்சியை அக்கட்சிக்குள்ளிருந்தே விமர்சனம் செய்தது, அர்னப் கோஸ்வாமியுடனான நேர்காணலில் விடையளிக்க முடியாமல் திணறியது, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் மசோதா நகலை ஊடகங்கள் முன் கொளுத்தியது போன்ற நிகழ்வுகள் அரசியல் தளத்துக்கு ராகுல் இன்னும் பண்படவில்லை என்பதை வெளிப்படையாகக் காட்டியது.

2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கண்ட தோல்வி, வரலாறு காணாத தோல்வியாக அமைந்தது, எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து கூட இல்லாமல் 22 உறுப்பினர்களோடு நாடாளுமன்றம் புகுந்தனர். அதற்கு ராகுலின் தலைமை மட்டும்தான் காரணம் என கூறமுடியாது. பத்து ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் ஊழல்கள் மக்களுக்கு காங்கிரஸ் மீதிருந்த நம்பிக்கையை இழக்கச்செய்தது.

ராகுலை மக்கள் இன்னும் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை 2019-ஆம் ஆண்டு அமேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பிரதிபளித்தன. “பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தான். பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் எதிர்க்கட்சிகளை அணித்திரட்டி குழப்பி பா.ஜ.க.வுக்கு அவர்களே வழி அமைத்து கொடுத்தனர்.” என்ற சீதாராம் யெச்சூரியின் கருத்து உற்று நோக்கத்தக்கது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் கம்யூனிஸ்ட்டுகளுடன் இருந்துகொண்டு, கேரளத்தில் அவர்களை எதிர்த்து வயநாட்டில் ராகுலை நிறுத்தியது மக்களுக்கு காங்கிரஸின் மேலிருந்த நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கியது. வடக்கே மம்தா, நவீன் பட்நாயக், தெற்கே சந்திரபாபு நாயுடு என வலிமை மிக்க தலைவர்களைக் கூட்டணியில் வைத்துக்கொண்டு பிரதமர் வேட்பாளரை நிறுத்தாதது நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கான பெரும் காரணமாக அரசியல்வல்லுனர்களால் பார்க்கப்படுகிறது.

கோவாவில் பா.ஜ.கவை விட அதிக இடங்களை வென்றிருந்தும் ஆட்சியமைக்கத் தவறியது, கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது என ராகுல் தலைமையிலான நம்பிக்கை மீது காங்கிரஸ் கட்சிக்குள்ளே கிசுகிசுக்கத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகினார் ராகுல். அந்த இடத்தில் அவர் தங்கை ப்ரியங்காவை அமர்த்தக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் முயற்சி செய்வதாக கூட பத்திரிக்கைகள் எழுதின. ஆனால் சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்று அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மாநில ஆட்சிகள் தொடர்ந்து கலைக்கப்பட்டு வருவது தலைமையை மட்டுமல்ல, ஒட்டுமொத்தக் கட்சியும் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது.

தென் இந்தியாவில் காவிமீதான வெறுப்பின் வெளிப்பாடு காங்கிரசின் ஓட்டு வங்கியை கனிசமாக உயர்த்தியுள்ளதை காணமுடிகிறது. ஆயினும், புதிய ராமர் கோவில் கட்டும் பணியை பிரதமர் தொடங்கியதன்மூலம் வடக்கே அவரின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

மோடி அலையிலிருந்து மீண்டு காங்கிரஸ் இழந்த இடத்தைப் பிடிக்குமா…? நிரந்தர தலைவராக பொறுப்பேற்பது யார்…? மக்களிடம் இழந்த நம்பிக்கையை மீட்பது எப்போது…? முறிந்த கை மீளுமா…? போன்ற கேள்விகளுக்கு காங்கிரசும், காலமும்தான் பதில் அளிக்க வேண்டும்!

DISCLAIMER: The opinions or views expressed are views of the individual writers and not of the institution. All forms of content published in this website and Student Journalist Council - GCT's social media handles are strictly properties of Student Journalist Council - GCT and are works of the various teams of the respective academic years.

No article, story or any form of content produced by Student Journalist Council - GCT is meant to be reproduced or distributed, either in parts or whole, without prior permission from Student Journalist Council - GCT for any purposes.

About the Author

Pavithra L

Pavithra L

Pavithra is a civil engineering student. The podium and the pen are her truest companions. Politics, anthropology and economics are her cups of tea.


Posts You May Like